Wednesday 1 August 2012

"32 பேர் பலியான ரெயில் விபத்து சதி வேலையா?



நேற்று முன்தினம் 32 பயணிகளைப் பலி கொண்ட தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, தனது
அறிக்கையை விசாரணை குழுவிடம் அளித்துள்ளது என்றும் அதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இக் கோர விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் டி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் நெல்லூரில் விசாரணை தொடங்க உள்ளனர். சக பயணிகள், விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட
உள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் நிலையத்துக்கு வந்தது.அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலின் எஸ்11 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாகவும், 26 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரைஅப் பெட்டியில் இருந்து 28 சடலங்களே கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டுள்ளன.அவற்றில் இதுவரை 19 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ள 9 உடல்கள் ஆணா, பெண்ணா என்று தெரியாத அளவுக்கு உருகுலைந்து போயுள்ளன.

இது விபத்தா, நாச வேலையா - ஆய்வு அடிப்படையில், தீ பிடித்த பெட்டியில் பயணம் செய்த 11 மர்ம ஆசாமிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடையாளம் காணப்பட்ட 15 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தீ விபத்து நடந்த பெட்டியில் 72 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தம் 72 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் விஜயாவாடாவை சேர்ந்த 5 பேரும், நாக்பூரை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, 66 பேர் மட்டுமே பெட்டியில் பயணம் செய்திருக்க
வேண்டும். ஆனால், இருக்கைகளைவிட கூடுதலாக 11 பேர் பெட்டியில் இருந்ததாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எஸ்11 பெட்டியில் 83 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சந்தேகிக்கும்படி 3 நபர்கள் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதித்ததாக பயணச்சீட்டுப் பரிசோதகர் சமனகாந்த்தை
இருப்புப்பாதை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 28 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்கள், 6 பெண்கள், 2 குழந்தைகள் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த பெட்டியில் பயணம் செய்த 11 பேரின் நிலைமை என்ன என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் எலும்பு உட்பட முழுவதுமாக கருகி சாம்பலானார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அடையாளம் தெரியாமல் இருக்கும் சடலங்களின்
உடல்பாகங்களை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் அரசு மருத்துவமனையில் இந்த சடலங்கள் ஒரு மாதம் வரை அழுகாத வகையில் குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கடந்த 2 நாட்களாக ரயில்வே மின்துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. விபத்து நடந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அறிக்கையை நேற்றிரவு விசாரணை அதிகாரி டி.கே.சிங்கிடம் ஒப்படைத்தது. அதில், தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெட்டியின் 40ம் எண்
சீட்டில் இருந்து தீ பிடித்து 22ம் எண் இருக்கை வரை பரவியது என்றும், அதன்பிறகு பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிந்த பெட்டியில் 40வது சீட்டின் கீழே பெரிய அளவிலான ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதாவது ரசாயனம் மற்றும்
வெடிமருந்து பொருட்களை யாராவது சட்டவிரோதமாக சென்னைக்குக் கொண்டுச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களிடம் விசாரித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு 4 நிமிடங்களிலேயே பெட்டி முழுவதும் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது என்றும், அதற்கு முன்பாக 3 முறை வெடி சத்தம் கேட்டது என்றும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரசாயன பொருட்களால் விபத்து ஏற்பட்டதா அல்லது சதி வேலை காரணமா என்ற கோணத்தில் காவல்துறை மற்றும் ரயில்வே துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

No comments: