Saturday 7 April 2012

2000 ஊழியர்களை பணிநிறுத்தம் செய்தது யாகூ!(yahoo)


2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது.

1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது.

யாகூ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த யாகூ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் தொம்ஸன், தங்களுடைய நிறுவனத்தின் இலக்கான பாவனையாளர்களையும் விளம்பரதாரர்களையும் முன்னிறுத்துதல் என்பதை நிறைவேற்றுவதற்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். தங்களுடைய இலக்கை நிறைவேற்ற ஆக்ரோஷமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், எனினும் தங்களுடைய நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கிய சேவைகளை தாங்கள் மிகவும் நன்றியுடன் நினைவுகூருவதாகவும் தெரிவித்தார்.

2000 ஊழியர்களை பணிநிறுத்துவதன் மூலம் யாகூ நிறுவனம் 375 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வருடந்தோறும் சேமிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இந்த 2000 ஊழியர் பணிநீக்கம் இறுதியானதாக அமைய வாய்ப்பில்லை எனவும், இது தொடர வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: