Thursday 23 February 2012

தமிழகம் முழுவதும், 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்!!!!!!

தமிழகம் முழுவதும், 1,900 இடங்களில்
சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்!!!!!!

அமைக்க, தமிழக எரிசக்தித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையங்கள் மூலம்,
20 ஆயிரம் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது!!!!

சூரிய சக்தி மின் நிலையம்: தமிழகத்தில்
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில்,
சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட பகுதிகளில், முதற்கட்டமாக இவை அமைக்கப்படுகின்றன. மேலும், தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



500 வாட் திறன்: வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாக, 32 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் உட்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, 500 வாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், தனியார் மூலம், ஆர்.எம்.யூ., எனப்படும், சிறிய வகை நவீன டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் கட்டமைப்பு அமைத்து, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம், சூரிய சக்தி தெரு விளக்குகள் இயங்க வைக்கப்படும்.



20 ஆயிரம் தெரு விளக்குகள்: இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம் 20 ஆயிரம் இடங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திற்கும், 10 விளக்குகளுக்கான மின் இணைப்புகள் வீதம், 1,900 நிலையங்களுக்கு, 19 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய சக்தி பெறும். தெரு விளக்கு கம்பங்கள் ஒவ்வொன்றிலும், 20 வாட் திறன் கொண்ட, அதிக ஒளி தரும் பல்புகள் பொருத்தப்படும். இதே போல், 1,000 இடங்களில் தனியாக, சூரிய சக்தி உற்பத்தி செய்யும் தகடுகள் பதித்த, தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தகடுகள் தானாகவே சூரிய சக்தியை உற்பத்தி செய்து, அதன் மூலம் இரவில் விளக்குகளை ஒளிர வைக்கும். சூரிய சக்தி கிடைக்காத நேரங்களில், தெரு விளக்குகள் எரிவதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, அனைத்து சூரிய சக்தி தெரு விளக்குகளுக்கும், தமிழக மின் வாரியத்தின் மின் இணைப்பும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



பராமரிப்பு: சூரிய சக்தி மின் நிலையப் பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள், ஐந்தாண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், தமிழகத்தில் மின் வெட்டால், தெரு விளக்குகள் எரியாத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

No comments: