Thursday 5 July 2012

பிரபஞ்சம் உருவானது எப்படி!!


பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

கடவுள் துகள்

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.

இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

பிரபஞ்ச ரகசியம் அவிழும்

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.

No comments: