Monday 19 March 2012

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

(டிஎன்எஸ்) பட்ஜெட்டில் கச்சா எண்ணெய் பொருட்கள் மீதான சுங்கவரி இந்த பட்ஜெட்டில் குறைக்கப்படாததால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி இன்று 2011- 2012ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரல் ஒன்றுக்கு 110 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறை க்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இது தெதடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி 5 சதவீதமாகவும், பெட்ரோல், டீசல் மீதான வரி 7.5 சதவீதத்திற்கு மிகாமலும் உள்ளது.

இதனால் 1 லிட்டர் பெட்ரோல் மூலம் 14.35 ரூபாய் வரியும், 1 லிட்டர் டீசலில் 4.60 ரூபாய் வரியும் பெறப்படுகிறது.

பெட்ரோல் விற்பனை செய்யும் நிறுவனங்களான ஐ.ஓ.சி., ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் 1 லிட்டர் பேட்ரோல் விற்பனையில் 2.25 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தன. இந்த நிலையில் கடந்த ஜுன்மாதம் எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக்கொள்ள அரசு அனுமதி அளித்திருந்தது.

அதன்பிறகு பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனையில் 1 லிட்டருக்கு ரூ. 21.60 பைசா அளவிலும், 14.2 கிலோ அளவுள்ள கேஸ் விற்பனையால் ரூ.356.07 என்ற அளவிலும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் மானியம் குறைக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு 38,386 கோடி மானியம் வழங்கி இருந்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் 23,640 கோடி ரூபாய் மட்டுமே மானியம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2011-12 ஆண்டுக்கான பட்ஜெட்டில் எண்ணெய் விற்பனை மூலம் 1,03,292 கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை மார்ச் 18-க்குப்பிறகு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசன நடத்த உள்ளதாக கூறினார். இந்த நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் 76,559 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)

No comments: