Saturday, 3 March 2012
ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம்.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் மனிதர்களில் கயவன் இருப்பது போல பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அடுத்து நான் சொல்ல வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர் உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும் முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல் சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தன் செயல் திறனுக்கும் அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால் தன் இதயத்திற்கும் தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இது மிகப்பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன் என் அன்பு மகன்.
Labels:
world
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment