Monday 19 March 2012

‘பிட்ச்’ என்று திட்டினாலும் பாலியல் டார்ச்சர்தான் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு


சென்னை: டான்பாஸ்கோ பள்ளி ஆசிரியர் "பிட்ச்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதும் கூட பாலியல் தொந்தரவுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வார்த்தையைப் பயன்படுத்திய ஆசியர் மீதான புகாரை விசாரிக்க புதிய குழுவை அமைக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில், ஆசிரியராக டார்மன் பெர்னாண்டஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல ஆசிரியையகளுக்கு எதிராக பிட்ச் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார். இதுகுறித்து ஆட்சேபம் தெரிவித்த ஆசிரியைகளின் வேண்டுகோளை ஏற்று விசாரணை நடத்த, ஒரு குழுவை பள்ளி நிர்வாகம் நியமித்தது. இக்குழு, முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, பெற்றோர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளைப் பிறப்பித்துள்ளது. விஷாகா வழக்கிலும், இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

இந்த வழிமுறைகள் பற்றி தெரிந்தவர்களை, விசாரணைக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். எனவே, டார்மன் பெர்னாண்டஸ் மீதான புகார்களை விசாரிக்க, புதிய குழுவை பள்ளி நிர்வாகம் நியமிக்க வேண்டும்.

நிர்வாகத்துக்கு, பள்ளியின் முதல்வர் அனுப்பிய புகாரை, விசாரணைக் குழுவில் வைக்க வேண்டும். விசாகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகளின்படி, விசாரணைக் குழு, தனது அறிக்கையை அளிக்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் வாக்குமூலம் அளிக்க முன்வரும் பெற்றோர், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாது.

ஆசிரியர் டார்மன், பிட்ச் என்ற சொல்லை பலருக்கு எதிராக பயன்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அளித்த புகார்கள், கமிட்டி முன் அளித்த வாக்குமூலங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, விஷாகா வழக்கில் கூறப்படும் பாலியல் தொந்தரவு வரையறைக்குள்தான், இந்தக் பிட்ச் என்ற வார்த்தையும் வருகிறது."

ஏற்கெனவே தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் செக்ஸி என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ள நிலையில், உயர்நீதி மன்றத்தின் இந்த புதிய உத்தரவு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

No comments: