Friday 10 February 2012

இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு?

லேப் டாப் களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மடிக் கணினியால் பாதிப்பு

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.

எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.

இவ்வாறு லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்காந்த கதிர்வீச்சு

இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். ப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அக்கறை அவசியம்

எனவே வை-பை இணைப்போடு லேப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் மற்றும் டேப்லெட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேப்டாப்களில் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: